அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, August 07, 2016

ஷிர்க் வைக்காமல் இருப்பதோடு மார்க்கத்தின் பிற கட்டளைகளையும் பின்பற்றுதல் அவசியம்…

            தினம் ஒரு ஹதீஸ் -248

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை. (திருக்குர்ஆன் 5:72) &அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும். (திருக்குர்ஆன் 6:88) & அல்லாஹ், அவனுக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான்.(திருக்குர்ஆன் 4:116)
அல்லாஹ்விற்கு இணை கற்பித்தால், செய்த நற்செயல்களுக்கு எதற்கும் கூலி கிடைக்காது. எனவே ஒருவர் சொர்க்கத்திற்குள் நுழைய வேண்டுமானால் முதல் & முக்கிய விஷயம், அவர் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத நிலையில் இறந்திருக்க வேண்டும், அதே நேரத்தில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் இருந்தால் மட்டும் போதும், மற்ற விஷயங்களில் ஏனோ தானோவென்று இருக்கலாம் என்றும் எவரும் எண்ணிவிடக்கூடாது. மற்ற பாவங்களை அல்லாஹ் தான் நாடியோருக்குத் தான் மன்னிப்பான், அவன் யாருக்கு நாடுகிறான் என்பது நமக்குத் தெரியாது. அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் இருப்பதோடு மார்க்கம் ஏவிய, தடுத்த விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும், (தாங்கள் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காதவர்கள் என்று சிலர் கூறிக் கொண்டு புறம் பேசி, பிறர் மானம் விஷயத்தில் விளையாடுவதையும், அசிங்கமாகப் பேசுவதையும் வலைதளங்களில் பரவலாகக் காணக் கூடிய ஒன்றாக உள்ளது.) அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் மரணித்தால் நிரந்தர நரகம் தான் கிடையாது, மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னித்தால் நரகம் செல்லாமல் தப்பலாம், அவன் மன்னிக்காவிடில் நரகம் சென்று தான் சொர்க்கம் செல்ல முடியும், அதுவும் அல்லாஹ் எவ்வளவு காலம் நரகில் வேதனை தர நாடுவான் என்றும் தெரியாது, இவ்வுலக நெருப்பை விட நரக நெருப்பு 69 மடங்கு கொடியது, (புகாரி 3265) அத்தகைய நரக நெருப்பின் சிறு கங்கை உள்ளங்காலின் கீழ் வைத்தாலே அதன் தாக்கத்தால் மூளையே கொதிக்கும், (இது தான் நரக தண்டணையில் சிறியது) [முஸ்லிம் 363] அந்த நரக நெருப்பு உடலில் பட்டால் உடல் கரிக்கட்டை ஆகி விடும், வேதனையை உணர புது தோல்கள் மாற்றப்பட்டு வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும், (திருக்குர்ஆன் 4:56) எனவே ஏகத்துவத்தில் உறுதியாக இருப்பதோடு, அல்லாஹ்விற்கு செய்யும் மற்ற வணக்கங்கள் விஷயத்திலும், பிற மனிதர்களின் உரிமை விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.


தவ்ஹீத்வாதிகளில் சிலர் (அவர்கள் செய்த வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்பட்டு (நரக நெருப்பின் தாக்கத்தால்) கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல்: அஹ்மத் 14901

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.