அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Thursday, May 05, 2016

நரகில் தள்ளும் தர்ஹா வழிபாடு!


தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகமாகும். ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது.

''இணை வைத்தல்'' என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தைப் புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும், அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)


அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:20, 21)மன்னிக்கப்படாத பாவம்:


தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
(அல்குர்ஆன் 4:48)


அழிந்து போகும் நல்லறங்கள்:


நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 39:65-66)


அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
(அல்குர்ஆன் 6:88)


சுவனம் செல்லத் தடை:


அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'.
(அல்குர்ஆன் 5:72)


நரகமே கூலி:


'எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி 4497அடக்கத்தலத்தில் விழா எடுக்க கூடாது:


உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: அபூதாவூத் 1746தர்ஹா கட்டத் தடை:


கப்ருகள் கட்டப்படுவதையும், கப்ருகள் பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610நபிமார்களின் கப்ருகளை கூட வணக்கத்தலங்களாக ஆக்க கூடாது:


தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816.


படைப்பினங்களில் மோசமானவர்கள்:


அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873நபி (ஸல்) அவர்களின் கட்டளை:


“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801


வேண்டாம் மாற்று மதக் கலாச்சாரம்:


(மற்றக்) கூட்டத்தார்களைப் போன்று யார் நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவர் தான். (நம்மைச் சார்ந்தவர் இல்லை).
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : அபூதாவுத் (3512)கோயில்களும், தர்ஹாவும்:


அங்கே சிலை வணங்கப் படுகின்றது. இங்கே கல்லறை வணங்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம், அங்கே நட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே படுக்க வைக்கப்பட்டிருக்கின்றது.

அங்கே இங்கே
குத்து விளக்கு குத்து விளக்கு
சூடம் பத்தி, சாம்பிராணி
திருநீறு சந்தனம்
பால் அபிஷேகம் சந்தன அபிஷேகம்
தேங்காய், வாழைப்பழம் வாழைப்பழம்
பஜனை மௌலூது
சிலைகளைச் சுற்றி வலம் வருதல் கப்ருகளைச் சுற்றி வலம் வருதல்
தேர்த் திருவிழா சந்தனக்கூடு திருவிழா
கொடியேற்றம் கொடியேற்றம்
பூசாரி ஆலிம்சா
சிலைகளுக்கு மேல் பட்டுப் புடவைகள், பூமாலைகள் கப்ருகளுக்கு மேல் பச்சைப் போர்வைகள், பூமாலைகள்

என்று முழுக்க, முழுக்க மற்ற மதத்தைக் காப்பியடித்து நடைபெறும் இந்த அவலத்தைக் காண அலங்காரம் செய்து கொண்டு வருகிறது மார்க்கம் அறியாத பெண்கள் கூட்டம். இவர்களை ரசிக்கவும் இடிக்கவும் திரளுகிறது இளைஞர் கூட்டம்.

ரோஷம் உள்ள எந்த ஆணும் தனது வீட்டுப் பெண்களை இங்கு செல்ல அனுமதிக்கலாமா? நம் சமுதாயப் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கும் இது போன்ற விழாக்களை ஜமாத்தார்களும், மார்க்க அறிஞர்களும், இளைஞர்களும் கண்டும் காணாமல் இருக்காலாமா?


இணைவைத்தலைப் பற்றி இறைவனும் இறைத் தூதரும் கடுமையாக எச்சரித்திருக்க முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் இறந்து விட்டவர்களுக்கு நினைவிடத்தை ஏற்படுத்தி அங்கே மண்டியிடுவது, நெற்றியை தரையில் வைப்பது (சஜ்தா செய்வது), இறந்துவிட்டவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்வது, அவர்களுக்காக நேர்ச்சை செய்வது, அறுத்துப் பலியிடுவது, கந்தூரி விழா எடுப்பது போன்ற காரியங்களை செய்வது இஸ்லாத்தின் உயிர் நாடியான ஏகத்துவக் கொள்கைக்கு மாற்றமானதாகும்.

இதைத் தடுக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. குறைந்த பட்சம் அதைக் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது? சில ஜமாத்தார்கள் இதைத் தாங்களும் தடுக்காமல் இருப்பதுடன் தர்ஹாவை வழிபடும் மக்களுடன் கைகோர்த்து கொண்டு இந்தக் கந்தூரியை ஊக்குவிக்கின்றனர். இது பற்றிக் அல்லாஹ் கூறுவதைப் படியுங்கள்!


தீமைக்கு உதவாதீர்:


நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 5:2)


இதை உடனடியாகத் தடுத்து நிருத்துங்கள்! கந்தூரிக்கு செல்வது, அதற்காக உதவி செய்வது இணைவைப்பிற்க்கு துணை போகும் காரியம் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். இல்லையேல் மறுமையில் குற்றவாளிகளாக நிற்பீர்கள்!

Thanks: 
https://m.facebook.com/SayNoToKabrWorship/

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.