அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Friday, May 13, 2016

சுன்னாவிற்கும் பித்ஆவிற்கும் மத்தியில் ஷஃபான் மாதம்நாம் இப்பொழுது ரமலானிற்கு முந்தைய மாதமான ஷஃபானிலே இருக்கிறோம். ஷஃபான் நபியவர்கள் அதிகமாக நோன்பு நோற்ற மாதம், ஆனாலும் சிலர் நபியவர்கள் இந்த மாதத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தையும் தாண்டி சில நூதனங்களையும், பலஹீனமான ஹதீஸ்களையும் அமல்படுத்துவதைப் பார்க்கிறோம். குறிப்பாக ஷஃபான் 15ஐ சிறப்பித்து வரும் செய்திகள் அனைத்தும் பலஹீனமானவையே. அந்த பலஹீனமான ஹதீஸ்கள் பின்வருமாறு:

முதலாவது ஆதாரம்:

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம்.
(அல்குர்ஆன் 44 : 2,3)


இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்த வரை ஒரு வசனத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)

அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமலான் மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.

இந்தக் குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். 
(அல்குர்ஆன் 2:185)
இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஅபான் மாதத்தின் 15ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.


இரண்டாவது ஆதாரம்:

‘அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் அடியார்களை உற்று நோக்கி இணைவப்பவரையும் பாவத்தில் மூழ்கியவனையும் தவிர மற்ற அனைவருக்கும் பாவங்களை மன்னிக்கிறான்’ என்று நபியவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜஹ்-1390 மற்றும் பல நூற்கள்)

இந்த செய்தி பல நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து வழிகளும் பலஹீனமானதாகும்.

01) அபூ ஸஃலபா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் அல்அஹ்வஸ் இப்னு ஹகீம் என்பவர் இடம் பெறுகிறார் இவர் மிகவுமே பலஹீனமானவர்.

02) அப்துல்லாஹ் இப்னு அம்ர் வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் இப்னு லஹீஆ மற்றும் ஹயய் இப்னு அப்தில்லாஹ் இடம் பெறுகின்றார். இதில் முதலாமவரைவிட இரண்டாமவர் மிகவும் பலஹீனமானவர்.

03) அபூ மூஸா அல்அஷ்அரி வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் லஹ்ஹாக் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

04) அபூ ஹூரைரா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் ஹிஷாம் இப்னு அப்திர்ரஹ்மான் என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

05) அபூ பக்ர் வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் இடம்பெறும் அப்துல் மலிக் ஹதீஸ்கலையில் நிராகரிகக்கப்பட்டவர்.

06) அவ்ப் வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் இப்னு லஹீஆ மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு ஸியாத் இடம்பெறுகிறார் இவ்விருவருமே பலஹீனமானவர்கள்.

07) ஆயிஷா வழியாக அறிவிக்கப்படும் செய்தியில் ஹஜ்ஜாஜ் இப்னு இர்தா இடம்பெறுகிறார் இவர் மனனத்தில் பலஹீனமானவர், தனக்கு யார் சொன்னார் என்ற விசயத்தில் இருட்டடிப்பு செய்பவர்.

மேற்குறிப்பிட்ட பலஹீனங்கள் ஒன்றையொன்று நிவர்த்தி செய்து ஹதீஸை ஸஹீஹ் என்ற தரத்திற்கு கொண்டுவரக்கூடிய இலேசான பலஹீனங்கள் கிடையாது. எனவே இந்தச் செய்தி ஏற்கத்தக்கதல்ல.

மூன்றாவது ஆதாரம்:

‘அல்லாஹ் ஷஃபான் 15வது இரவில் சூரிய அஸ்த்தமனத்தின் போது முதல் வானத்திற்கு இறங்கி என்னிடத்தில் பாவமன்னிப்புத் தேடுபவர் யார்? அருள் வேண்டுபவர் யார்? துயர் நீங்கக் கேட்பவர் யார்? மன்னிப்பதற்கும் அருள் வழங்கவும் ஆரோக்கியம் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன். விடியும் வரையில் கூறிக் கொண்டே இருப்பான். எனவே அவ்விரவில் எழுந்து வணங்குங்கள் பகலில் நோன்பு வையுங்கள்.’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
(இப்னுமாஜஹ்:1388)

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல. இது இட்டுக் கட்டப்பட்ட ஒன்றாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு அபீ ஸப்ரா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக்கூடியவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும் கூறியுள்ளார்கள்.

அஸ்பஹானி அவர்கள் தம்முடைய அத்தர்கீப் நூலில் (ஹதீஸ் எண்: 1831) மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாக இந்தச் செய்தியை பதிவு செய்துள்ளார்கள். அதில் உமர் பின் மூஸா அல்வஜீஹி என்பவர் இடம் பெறுகிறார். இவரும் நபிகள் நாயகம் கூறாதவற்றை இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நான்காவது ஆதாரம்:

‘ஐந்து நாட்களின் இரவுகளில் கேட்கப்படும் துஆக்கள் மறுக்கப்படமாட்டாது: ரஜப் மாதத்தின் முதலிரவு, ஷஃபானின் 15வது இரவு, ஜும்ஆ இரவு, இரு பெருநாள் இரவுகள் என்று நபியவர்கள் கூறினார்கள். (தாரீகு இப்னு அஸாகிர் 10-408)

இந்தச்செய்தியை அறிவிப்பவர்களில் புன்தார் என்பவர் பொய்யர் என்ற விமர்சனத்தை ஹதீஸைப் பதிவு செய்த இமாம் இப்னு அஸாகீர் ஹதீஸின் கீழேயே குறிப்பிடுகிறார். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டதாகும்.

ஐந்தாவது ஆதாரம்:

‘யார் இரு பெருநாள் இரவுகளையும் ஷஃபான் 15 வது இரவையும் வணக்கத்தால் உயிர்ப்பிக்கிறாரோ உள்ளங்கள் இறந்துவிடும் நாளில் அவரது உள்ளம் இறக்காமல் இருக்கும்’ என்று நபியவர்கள் கூறினார்கள்.
(மஃரிபதுஸ் ஸஹாபா-5333)

இந்த ஹதீஸில் இடம்பெறும் மர்வான் இப்னு ஸலாம் அல்கிபாரி மிகவும் பலஹீனமானவர்.

“இமாம்களான அஹ்மத், உகைலி, நஸாஈ போன்றோர் இவர் நம்பகமானவரல்ல என்று குறிப்பிடுகின்றாரகள். இன்னொரு இடத்தில் இமாம் நஸாஈ அவர்களும் மற்றும் புகாரி, முஸ்லிம், அபூ ஹாதீம் போன்றோர் இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் ஹர்ரானி அவர்கள் இவர் ஹதீஸ்களை புனைபவர் என்றும் விமர்சிக்கின்றனர்.” (தஹ்தீபுத்தஹ்தீப் 10- 84)


ஆறாவது ஆதாரம்:

ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.
அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ
நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும். மேலும் இதுபற்றி அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடர்களில் உள்ள அதிகமானவர்கள் யாரென்றே அறியப்படாதவர்கள், இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை என இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தம்முடைய மவ்லூஆத் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 129) குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் ஹதீஸ் கலை ஆய்விலுள்ள பெரும்பான்மையான உலமாக்கள் இதனை நபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என விமர்சித்து இவற்றைச் செய்யக்கூடியவர்கள் நரகத்திற்குரிய காரியத்தைச் செய்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த இமாம் சுயூத்தி ஆவார்கள். அவர்கள் தம்முடைய நூலான அல் அம்ரு பில் இத்திபா வந்நஹ்யு அனில் இப்திதாஃ (நபிவழியை பின்பற்றும் உத்தரவும், பித்அத்துகளை உருவாக்குவதற்குத் தடையும்) என்ற நூலில் (பாகம்: 1, பக்கம்: 17) இவ்வாறு ஷஅபான் 15வது இரவில்,இல்லாத தொழுகையைத் தொழுபவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனால் ஏற்படும் அனாச்சாரங்களையும், அக்கிரமங்களையும் பட்டியலிட்டுள்ளார்கள்.

அறிஞர் இப்னு அபீ முலைக்கா அவர்கள் இவ்வாறு ஷஅபான் 15வது இரவை சிறப்பிப்பதை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அய்யூப் அவர்கள் அறிவிக்கிறார்கள்: நீதிபதியாக இருந்த ஸியாதன் முன்கிரிய்யு என்பவர்,ஷஅபான் 15ஆம் இரவின் கூலி லைலத்துல் கத்ரின் கூலியைப் போன்றதாகும் என்று கூறியதாக இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது. என்னுடைய கையில் பிரம்பு இருக்கும் நிலையில் அவர் இவ்வாறு கூறியதை நான் செவியேற்றிருந்தால் அந்தப் பிரம்பினால் அவரைச் சாத்தியிருப்பேன் என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 4, பக்கம்: 317)

முஹ்ம்மத் பின் ஸலாம் என்பார் அறிவிக்கிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஷஅபான் 15ஆம் இரவில் (அல்லாஹ்) இறங்குவதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் பலவீனமானவனே! 15ஆம் இரவு (பற்றிய செய்திகள் பலவீனமானவையாகும்.) அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இறங்குகிறான் என்று கூறினார்கள்.

நூல்: அகீததித் ஸலஃப் அஸ்ஹாபுல் ஹதீஸ், பாகம்: 1 பக்கம்: 12

பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள். இவர்கள் பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2697


நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3243
அதிகமான நோன்பு நோற்ற மாதம்

நான் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமலானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள்.
(அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா)


எனவே இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.

ஷவ்வால் ஆறு நோன்புகள் நோற்பவன் அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (முஸ்லிம்)

வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (திர்மிதி)

ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களின்) பாவங்கள் மன்னிக்கப்படும். (முஸ்லிம்)


இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை முஸ்லிம்களில் அதிகமானோர் அலட்சியம் செய்கின்றார்கள். ஆனால் சாியான சான்றுகளும் உத்தரவாதமும் கூறப்படாத பராஅத் நோன்பை நோற்க ஆர்வம் கொள்கின்றார்கள்.

இது தவிர்க்கப்பட வேண்டிய விசயமுமாகும். எனவே, ஷஃபானின் 15ஆம் நாளுக்கு தனிப்பட்ட சிறப்புகள் எதுவும் இல்லை என விளங்கி, நாம் ஷஃபானில் கூடுதலாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!


Thanks :

http://mujahidsrilanki.com/
http://www.onlinepj.com


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.