அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Sunday, May 08, 2016

குர்ஆன் 3:169 வசனமும், சமாதி வழிபாடும்…

             தினம் ஒரு ஹதீஸ் - 157

திருக்குர்ஆன் 2:154, 3:169 ஆகிய வசனங்களில் “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் தமது இறைவனிடம் உயிருடன் உள்ளார்கள்” என்று கூறப்படுவதை சிலர் தவறாக விளங்கிக் கொண்டு அவ்லியாக்கள்(?) என்ற பெயரில் சமாதிகளில் இருப்போர்கள் உயிருடன் உள்ளனர், அவர்களை வழிபடலாம் என்று தங்கள் சமாதி வழிபாடுக்கு புது வியாக்கியானம் தருகின்றனர், முதலில் கவனிக்கப்பட வேண்டியது, இவ்வசனங்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களைப் பற்றியது, அல்லாஹ்விற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த உன்னதமானவர்களைப் பற்றியது, இன்று அவ்லியாக்கள் என்ற பெயரில் தர்ஹாக்களில் சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் அனைவரும் என்ன அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களா? (கிறுக்கனுக்குத் தர்ஹா, மிருகங்களுக்குத் தர்ஹா, சமாதியே இல்லாமல் தர்ஹா, இன்னும் பல அவலங்கள்). அடுத்ததாக அவ்லியாக்கள் என்ற இறைநேசர்களை நம் இஷ்டப்படியெல்லாம் தீர்மானித்து விட முடியாது, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்கள் யார் என்பதை அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும், அல்லது அவனது தூதர் சொல்லியிருக்க வேண்டும், இதுவல்லாமல் நாமாக யாரையாவது தீர்மானித்தால் அது பாவமான காரியமாகும்.
நாங்கள் தர்ஹாக்களில் அடங்கியுள்ளவர்களை நாங்கள் வணங்கவில்லை, அவர்கள் எங்களை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குவார்கள், பரிந்துரை செய்வார்கள் என்று தான் நம்பி அவர்களிடம் துஆ செய்கிறோம் என்று தங்கள் மடத்தனத்திற்கு ஒரு வியாக்கியானம் கொடுக்கிறார்கள். இவர்களின் இந்த நம்பிக்கை தான் மக்கத்து காபிர்களின் நம்பிக்கை, அதை அல்லாஹ் குர்ஆனிலே கூறி கண்டிக்கிறான், (பார்க்க: குர்ஆன் 6:94, 10:18, 39:3), அல்லாஹ்விற்குச் செய்யும் அனைத்து வணக்கங்களையும் இவர்கள் சமாதியில் அடங்கியுள்ளவர்களுக்கு செய்தால் மட்டுமே, இவர்கள் கப்ர்களை வணங்கிறார்கள் என்று சொல்ல முடியும் என்பது இல்லை, அல்லாஹ்வின் மேல் மட்டும் வைக்க வேண்டிய நம்பிக்கையில் ஒன்றைக் கூட பிறர் மேல் வைத்தாலும் அது ஷிர்க் தான், (தாயத்து அணிவது ஷிர்க் என்று மார்க்கம் சொல்வதும் இவ்வடிப்படையில் அமைந்ததே). அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களிலேயே முக்கியமான வணக்கம் துஆ ஆகும், இறந்தவர்களை செவியேற்கச் செய்ய முடியாது (குர்ஆன் 27:80, 30:52, 35:22) என்றும், எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள் (குர்ஆன் 16:20,21) என்றும் அல்லாஹ்வையன்றி பிரார்த்திக்கப்படும் மற்றவைகளால் எதுவும் முடியாது (குர்ஆன் 7:191-198, 10:106, 22:73, 34:22, 35:13,14 & இன்னும் பல வசனங்கள்) என்றும் அல்லாஹ் தெளிவாக சொல்லியிருக்கையில் துஆ எனும் வணக்கத்தை சமாதிகளில் உள்ள இறந்தவர்களுக்குச் செய்கிறார்கள், இது நபி (ஸல்) அவர்கள் வன்மையாகத் தடுத்ததும், அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தருவதும், நிரந்தர நரகில் சேர்க்கும் செயலாகும். அடுத்ததாக, தங்கள் செய்கையை நியாயப்படுத்த ஜியாரத் செய்கிறோம் என்ற வாதம் வைக்கிறார்கள், இதைப் பற்றி முன்னரே விளக்கப்பட்டுள்ளது,
குர்ஆன் 3:169 க்கு இவர்கள் சொல்லும் அர்த்தத்தை ஒரு பேச்சுக்கு வைத்தாலும், வணக்கம் செலுத்துவதற்கு உயிருடன் இருத்தல் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமா? உண்மையான இறைநேசரான ஈஸா (அலை) அவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளார்கள், அவர்களை வணங்குவதை சரி என்று இவர்கள் சொல்வார்களா? அம்மக்கள் போல் இவர்களும் தேவாலயத்திற்குச் செல்வார்களா? உயிருடன் உள்ள ஈஸா (அலை) அவர்களை வணங்குவதை அல்லாஹ் கண்டிக்கிறானே, அதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்? அதே செயலைத் தானே இன்று இந்த கப்ர் வணங்கிகளும் செய்கிறார்கள்.
குர்ஆன் 3:169 க்கு இவர்கள் வைக்கும் அர்த்தம் சொல்லப்படவில்லை, அது நம்மால் உணர முடியாத, நம்மால் தொடர்பு கொள்ள முடியாத, வேறு உலகில் (சொர்க்கத்தில்) உள்ளார்கள் என்பதைத் தான் அவ்வசனம் கூறுகிறது, அதுவும் இவ்வுலகில் இருந்த தோற்றத்திலும் அல்ல, பறவை வடிவில் தான் அங்கும் இருக்கிறார்கள், அல்லாஹ்விற்காக உயிர்த்தியாகம் செய்ததால், கப்ர் வாழ்வு இல்லாமல் சொர்க்க வாழ்வை அனுபவிப்பதற்காக அந்த ஏற்பாடு, இப்படியிருக்கையில் இங்கு நடப்பது அவர்களுக்கு எப்படி தெரியும்? இவ்வசனத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளார்கள்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர். இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். (இறந்த பின், எவராக இருந்தாலும் பூவுலகிற்குத் திருப்பி அனுப்பப்படுவதில்லை என்பதால்) அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 3834


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.