அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு

Wednesday, February 10, 2016

தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்


    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. இந்தச் சுருக்கமான தொகுப்பில் ஒரு முஸ்லிம் எதற்காகத் தொழ வேண்டும், அதனால் ஏற்படும் பயன்கள் என்ன மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் கூறுவதைப் பார்ப்போம்.


1. தொழுகையின் அவசியம்: 


மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை.


 ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)

தொழுகை நேரங்குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது:

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)


வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரீ 8, முஸ்லிம் 21  


எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்:

எல்லாத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகைகளையும் பேணித் தொழுது கொள்ளுங்கள். தொழுகையின் போது அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சத்தோடு நில்லுங்கள். 
(அல்குர்ஆன் 2 : 238)

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்:

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

ஜமாத்அத்தோடு தொழவேண்டிய அவசியம்:

நீங்கள் தொழுகையையும் நிலைநாட்டுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். மேலும் என் முன்னிலையில் (தலை சாய்த்து) ருகூஉ செய்பவர்களுடன் நீஙகளும் சேர்ந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 43)

எவ்வித பேரமோ நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாறும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு (முஹம்மதே!) கூறுவீராக அல்குர்ஆன் 14:31

இதைப் போன்று ஏராளமான குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுகின்றன.  2. தொழுகையின் பலன்கள் : 


தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது: 

'உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது; அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார்; அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா? எனக் கூறுங்கள்' என்று நபித்தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித்தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் (சிறிய) பாவங்களை அகற்றுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரீ 528, முஸ்லிம் 1071  

'ஐவேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ ஆகியன அவற்றுக்கிடையில் ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும்; பெரும் பாவங்களைத் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 394


மானக்கேடாவைகளைத் தடுக்கிறது:

(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்வது  மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)

உரிய நேரத்தில் உள்ளச்சத்துடன் தொழுபவரை மன்னிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

‘ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ – இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.’ 
அறிவிப்பவர்: : உபாதா பின் ஸாமித் (ரலி), 
ஆதாரம்: அபூதாவூது

தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும்:

‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் . அறிவிப்பவர்:: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்.

தொழுபவர்கள் மார்க்கத்தில் சகோதரர்கள்:

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)


3. தொழுகையை விடுவதனால் ஏற்படும் விளைவுகள்:


தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு:

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். 
(அல்குர்ஆன் 30:31)

கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும். 

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது?' என்று விசாரிப்பார்கள். 'நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 74:40-44)


ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, 'அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

நூல்: புகாரீ 1143


   (முஸ்லிம்களான) நம்மையும், (இறை மறுப்பாளர்களான) அவர்களையும் (வேறுபடுத்திக் காட்டும்) ஒப்பந்தமானது தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: நஸாயீ 463

சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது:

அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)

தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்:

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)


எனதருமை சகோதர சகோதரிகளே, அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்ட தொழுகையை விடுவதன் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க கடமைப்பட்டடுள்ளோம். ஷைத்தானின் சோம்பல் என்னும் வலையில் சிக்கி விடாமல் அல்லாஹ் என்னையும், உங்களையும் மற்றும் முஸ்லிமான நம் அனைவரையும் பாதுகாத்து தொழுகையை முறைப்படி தொழுவோரின் கூட்டத்தாருடன் சேர்த்துவைத்து நம்மை சுவனபதியில் சேர்த்தருள்வானாக!  ஆமீன்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.